Montag, 25. Juni 2007

பூவரசம்பூ பூத்தாச்சு - ஒருக்கால் பாருங்கோவன்



பொழுதுசாயிற நேரமாப் பாத்து இந்தப் பக்கம் வந்திட்டனோ எண்டு தெரியேல்லை.

வயசுபோனாப் பிறகு மனிசர் செய்யிறதுக்கெண்டும் சில வேலையள் இருக்குது. அதுகளை விளங்கிக் கொள்ளாமல், பிள்ளை இல்லாத வீட்டிலை துள்ளி விளையாடுற கிழடுகள் மாதிரி (அதுகும் உங்கை ஏராளமான பிள்ளையள் துள்ளிக்கொண்டிருக்கிற வீட்டுக்குள்ளை வந்து) துள்ள நினைச்சால் எல்லாரும் ஒருமாதிரி இளக்காரமாத்தான் பாப்பினம்.

"அப்பு இது எனக்கு விளங்குதில்லை!" எண்டு ஒண்டைப் பற்றிக் கேட்டால் சொல்லித் தாறதுக்கு ஒருத்தரும் இல்லை.
(உண்ணக் குடிக்க நேரமில்லாமல் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கினம்)
சிலவேளை அவையளை வழிமறிச்சு நிப்பாட்டிக் கேட்டால்-
"உந்த வயசிலை உதுகளைப் படிச்சு என்ன செய்யப் போறியள்?" எண்டு கேட்டுச் சிரிக்கினம்.

அந்த நாளையிலை "ஆர்ட்ஸ்"படிக்க ஆசைப்பட்ட என்னைத் தூக்கி "சயன்ஸ்" வகுப்பிலைபோட்டு "நீ நல்ல கெட்டிக்காரன் நல்லாப் படிச்சியெண்டால் டாக்குத்தரா அல்லது இஞ்சினியரா வரலாம்!" எண்டு ஆசீர்வதிச்ச "சீனியர்ஸ்கூல்" பிரின்ஸ்பல் வில்வரத்தின மாஸ்ரரும், ராஜேஸ்வரிப் பள்ளிக்கூடத்து சின்னத்துரை வாத்தியாரும் இப்ப இருந்திருந்தால் என்னைப் பார்த்து எவ்வளவு கவலைப்பட்டிருப்பினம்.("விஞ்ஞானம் வளர்ந்த நாட்டுக்கு வந்தும் விலாந்திக்கொண்டு நிற்கிறான் பார்!" எண்டு விளாசினாலும் விளாசிப் போடுவினம்)

முந்தியெண்டால் எழுத்தாளர் எண்டு இருக்கிறவைக்கு எழுதத் தெரிஞ்சால் போதும். எழுதிப்போட்டு ஒரு கடித உறைக்குள்ளை வைச்சு முத்திரை ஒட்டி (பேப்பர்காரர் அந்தக் கதையைத் திருப்பி அனுப்புறதெண்டால் அதுக்கும் தேவையான முத்திரையோடை இன்னொரு உறையையும் வைச்சு) பேப்பருக்கு அனுப்பிப்போட்டு இருந்திடலாம்.
இப்ப அப்பிடி ஏலாது.
நாங்களே எழுதி நாங்களே புத்தகமாக்கி நாங்களே வாசிச்சுப் போட்டு இருக்கவேணும்.
உதுக்கு எழுதிறதோடை அச்சு வேலை புத்தகம் கட்டுற வேலை ஒட்டுறவேலை அனுப்புற வேலை எண்டு ஏகப்பட்ட சோலியளை நாமளே பாக்கவேணும்.

உந்தச் சோலி வேணாமெண்டு "இன்ரநெற்"றிலை எழுதலாமெண்டால் உதுக்கும் பத்துத்தலை ராவணன்மாதிரி இருந்தாத்தான் வேலையள் நடக்கும் போலை இருக்குது.

சில நேரங்களிலை எல்லாம் எனக்கு விளங்கிறதுமாதிரி இருக்குது.
சில நேரங்களிலை ஒண்டுமே விளங்குதில்லை.
எழுதிறதுகள் அழிஞ்சு போறதும், ஆராவது பின்னூட்டம் எண்டு எனக்கு ஏதேனும் சொல்ல வெளிக்கிட்டால் அது காணாமல் போறதும், சிலபேர் எழுதிற காயிதங்கள் தமிழிலை வராமல் என்ரை கண்ணுக்குப் பூஞ்சணம் காட்டிறதும் எண்டு ஒரே தலைச்சுத்துத்தான்.
"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை விரட்டிற" அம்புலிமாமாக் கதைமாதிரி உதுக்குப் பின்னாலை ஓடிறதைத் தவிர என்னாலை வேறை ஒண்டும் செய்ய முடியேல்ல.
போனவருசம் தமிழ்மணத்திலை என்ரை பேரைப் பதிஞ்சுபோட்டன்.
ஆனா இண்டைவரைக்கும் என்ரை ஆக்கம் ஒண்டுகூட தமிழ்மணத்திலை வரேல்ல. (நல்லகாலம் தப்பினம் எண்டு கனபேருக்குச் சந்தோசமாய் இருக்கும் எண்டதிலை எனக்குச் சந்தோசம்தான். மற்றவையள் சந்தோசப்படுகிறதைப் பார்த்து சந்தோசப் படுகிறதுதான் உலகத்திலையே பெரிய சந்தோசம் எண்டு பாக்கியராஜ் சொல்லுறதுமாதிரி. )

தொடக்கத்திலை "வாங்க சின்னாச்சியின்ரைமோன்!" எண்டு சந்தோசமாக் கூப்பிட்டுக்கொண்டு வந்தசோழியான், இளைஞன், மதி, மகேஸ், கனக்ஸ், கொண்டோடி, எல்லாரும் "உந்தக் கிழட்டுக்கு உருப்படியா ஒண்டும் தெரியாது!" எண்டு விளங்கிக்கொண்டு சத்தமில்லாமல் போயிட்டினம்.(அவையளுக்கும் ஆயிரத்தெட்டுச் சோலியள் இருக்கும்) எண்டாலும் அவையளை இப்பவும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் எண்டது அவையளுக்குத் தெரியாமல் இருக்காது.

கனக்க எழுதாட்டிலும் அப்பப்ப எல்லாரின்ரை எழுத்துக்களையும் மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறன். முதல்லை நான் சொன்னவையோடை ஈழநாதன், சந்திரவதனா, வசந்தன், சயந்தன், சின்னக்குட்டியர், மயூரன், மலைநாடான், கானாபிரபா எண்டு இவையளின்ரை எழுத்துக்களையும் அப்பப்ப வாசிச்சுக்கொண்டிருக்கிறன்.
(இந்தப் பட்டியலிலை தமிழ்நாட்டு எழுத்தாளர்களை நான் சேர்க்கேல்லை. நான் வாசிக்கிற அவையளின்ரை பட்டியல் பெரிசு. அது தனியாய் பிறகு எழுதுவன்)

தனியாக்களைத் தவிர யாழ்.,பதிவுகள், தமிழம், தமிழ்நாதம், தமிழ்மணம், நூலகம், சுரதா, மொழி, தமிழமுதம், தோழியர், வெற்றிமணி எண்டு இன்னொரு பட்டியல்.

என்ரை வாசிப்பு அனுபவங்களைச் சொல்கிறதுக்காக பூவரசம்பூ எண்டு ஒரு வலைப்பூ எழுதிறன். பார்க்கச் சந்தர்ப்பம் கிடைச்சால் பாருங்கோ.
(நான் அதிலை குறிச்சுக்கொண்டு வாற எழுத்தாளர்மாரைப்பற்றி மேலதிக தகவல்கள் உங்களுக்குத் தெரிஞ்சால் சொல்லுங்கோ. பிறகு ஒரு பதிவிலை அவையளைப்பற்றி நான் விரிவா எழுத உதவும்.)

மறந்திடாதேங்கோ.

-சின்னாச்சியின்ரமோன்

Keine Kommentare: