Montag, 25. Juni 2007

பூவரசம்பூ பூத்தாச்சு - ஒருக்கால் பாருங்கோவன்



பொழுதுசாயிற நேரமாப் பாத்து இந்தப் பக்கம் வந்திட்டனோ எண்டு தெரியேல்லை.

வயசுபோனாப் பிறகு மனிசர் செய்யிறதுக்கெண்டும் சில வேலையள் இருக்குது. அதுகளை விளங்கிக் கொள்ளாமல், பிள்ளை இல்லாத வீட்டிலை துள்ளி விளையாடுற கிழடுகள் மாதிரி (அதுகும் உங்கை ஏராளமான பிள்ளையள் துள்ளிக்கொண்டிருக்கிற வீட்டுக்குள்ளை வந்து) துள்ள நினைச்சால் எல்லாரும் ஒருமாதிரி இளக்காரமாத்தான் பாப்பினம்.

"அப்பு இது எனக்கு விளங்குதில்லை!" எண்டு ஒண்டைப் பற்றிக் கேட்டால் சொல்லித் தாறதுக்கு ஒருத்தரும் இல்லை.
(உண்ணக் குடிக்க நேரமில்லாமல் எல்லாரும் ஓடிக்கொண்டிருக்கினம்)
சிலவேளை அவையளை வழிமறிச்சு நிப்பாட்டிக் கேட்டால்-
"உந்த வயசிலை உதுகளைப் படிச்சு என்ன செய்யப் போறியள்?" எண்டு கேட்டுச் சிரிக்கினம்.

அந்த நாளையிலை "ஆர்ட்ஸ்"படிக்க ஆசைப்பட்ட என்னைத் தூக்கி "சயன்ஸ்" வகுப்பிலைபோட்டு "நீ நல்ல கெட்டிக்காரன் நல்லாப் படிச்சியெண்டால் டாக்குத்தரா அல்லது இஞ்சினியரா வரலாம்!" எண்டு ஆசீர்வதிச்ச "சீனியர்ஸ்கூல்" பிரின்ஸ்பல் வில்வரத்தின மாஸ்ரரும், ராஜேஸ்வரிப் பள்ளிக்கூடத்து சின்னத்துரை வாத்தியாரும் இப்ப இருந்திருந்தால் என்னைப் பார்த்து எவ்வளவு கவலைப்பட்டிருப்பினம்.("விஞ்ஞானம் வளர்ந்த நாட்டுக்கு வந்தும் விலாந்திக்கொண்டு நிற்கிறான் பார்!" எண்டு விளாசினாலும் விளாசிப் போடுவினம்)

முந்தியெண்டால் எழுத்தாளர் எண்டு இருக்கிறவைக்கு எழுதத் தெரிஞ்சால் போதும். எழுதிப்போட்டு ஒரு கடித உறைக்குள்ளை வைச்சு முத்திரை ஒட்டி (பேப்பர்காரர் அந்தக் கதையைத் திருப்பி அனுப்புறதெண்டால் அதுக்கும் தேவையான முத்திரையோடை இன்னொரு உறையையும் வைச்சு) பேப்பருக்கு அனுப்பிப்போட்டு இருந்திடலாம்.
இப்ப அப்பிடி ஏலாது.
நாங்களே எழுதி நாங்களே புத்தகமாக்கி நாங்களே வாசிச்சுப் போட்டு இருக்கவேணும்.
உதுக்கு எழுதிறதோடை அச்சு வேலை புத்தகம் கட்டுற வேலை ஒட்டுறவேலை அனுப்புற வேலை எண்டு ஏகப்பட்ட சோலியளை நாமளே பாக்கவேணும்.

உந்தச் சோலி வேணாமெண்டு "இன்ரநெற்"றிலை எழுதலாமெண்டால் உதுக்கும் பத்துத்தலை ராவணன்மாதிரி இருந்தாத்தான் வேலையள் நடக்கும் போலை இருக்குது.

சில நேரங்களிலை எல்லாம் எனக்கு விளங்கிறதுமாதிரி இருக்குது.
சில நேரங்களிலை ஒண்டுமே விளங்குதில்லை.
எழுதிறதுகள் அழிஞ்சு போறதும், ஆராவது பின்னூட்டம் எண்டு எனக்கு ஏதேனும் சொல்ல வெளிக்கிட்டால் அது காணாமல் போறதும், சிலபேர் எழுதிற காயிதங்கள் தமிழிலை வராமல் என்ரை கண்ணுக்குப் பூஞ்சணம் காட்டிறதும் எண்டு ஒரே தலைச்சுத்துத்தான்.
"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் வேதாளத்தை விரட்டிற" அம்புலிமாமாக் கதைமாதிரி உதுக்குப் பின்னாலை ஓடிறதைத் தவிர என்னாலை வேறை ஒண்டும் செய்ய முடியேல்ல.
போனவருசம் தமிழ்மணத்திலை என்ரை பேரைப் பதிஞ்சுபோட்டன்.
ஆனா இண்டைவரைக்கும் என்ரை ஆக்கம் ஒண்டுகூட தமிழ்மணத்திலை வரேல்ல. (நல்லகாலம் தப்பினம் எண்டு கனபேருக்குச் சந்தோசமாய் இருக்கும் எண்டதிலை எனக்குச் சந்தோசம்தான். மற்றவையள் சந்தோசப்படுகிறதைப் பார்த்து சந்தோசப் படுகிறதுதான் உலகத்திலையே பெரிய சந்தோசம் எண்டு பாக்கியராஜ் சொல்லுறதுமாதிரி. )

தொடக்கத்திலை "வாங்க சின்னாச்சியின்ரைமோன்!" எண்டு சந்தோசமாக் கூப்பிட்டுக்கொண்டு வந்தசோழியான், இளைஞன், மதி, மகேஸ், கனக்ஸ், கொண்டோடி, எல்லாரும் "உந்தக் கிழட்டுக்கு உருப்படியா ஒண்டும் தெரியாது!" எண்டு விளங்கிக்கொண்டு சத்தமில்லாமல் போயிட்டினம்.(அவையளுக்கும் ஆயிரத்தெட்டுச் சோலியள் இருக்கும்) எண்டாலும் அவையளை இப்பவும் நான் நினைச்சுக்கொண்டிருக்கிறன் எண்டது அவையளுக்குத் தெரியாமல் இருக்காது.

கனக்க எழுதாட்டிலும் அப்பப்ப எல்லாரின்ரை எழுத்துக்களையும் மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறன். முதல்லை நான் சொன்னவையோடை ஈழநாதன், சந்திரவதனா, வசந்தன், சயந்தன், சின்னக்குட்டியர், மயூரன், மலைநாடான், கானாபிரபா எண்டு இவையளின்ரை எழுத்துக்களையும் அப்பப்ப வாசிச்சுக்கொண்டிருக்கிறன்.
(இந்தப் பட்டியலிலை தமிழ்நாட்டு எழுத்தாளர்களை நான் சேர்க்கேல்லை. நான் வாசிக்கிற அவையளின்ரை பட்டியல் பெரிசு. அது தனியாய் பிறகு எழுதுவன்)

தனியாக்களைத் தவிர யாழ்.,பதிவுகள், தமிழம், தமிழ்நாதம், தமிழ்மணம், நூலகம், சுரதா, மொழி, தமிழமுதம், தோழியர், வெற்றிமணி எண்டு இன்னொரு பட்டியல்.

என்ரை வாசிப்பு அனுபவங்களைச் சொல்கிறதுக்காக பூவரசம்பூ எண்டு ஒரு வலைப்பூ எழுதிறன். பார்க்கச் சந்தர்ப்பம் கிடைச்சால் பாருங்கோ.
(நான் அதிலை குறிச்சுக்கொண்டு வாற எழுத்தாளர்மாரைப்பற்றி மேலதிக தகவல்கள் உங்களுக்குத் தெரிஞ்சால் சொல்லுங்கோ. பிறகு ஒரு பதிவிலை அவையளைப்பற்றி நான் விரிவா எழுத உதவும்.)

மறந்திடாதேங்கோ.

-சின்னாச்சியின்ரமோன்

Montag, 9. April 2007

எல்லாம் ஒரு நேரம்தான்!

எதையும் சரியாத் தெரிஞ்சுகொள்ளாமல் ஒரு காரியத்திலை இறங்கிறது சரியான பிழை(?)
எல்லாத்தையும் சரியாத் தெரிஞ்சுகொண்டபிறகுதான் காரியத்திலை இறங்கவேணுமெண்டால் அதுக்குள்ளை காலம் கடந்திடும்.

அப்ப என்னதான் செய்கிறது?
காரியங்களைச் செய்துகொண்டே சரி பிழையளையும் கவனிக்கவேண்டியதுதான்.

என்னதான் கொம்பியூட்டரிலை நாலு எழுத்துத் தட்டத்தெரியும் எண்டாலும் இந்தக் கணணிக்குள்ளை வலபதியிறது எண்டது கொஞ்சம் சங்கடமான காரியம்.

என்னெண்டுதான் ஒவ்வொருத்தரும் ஆறேழு எண்டு - உந்தப் பிள்ளை சந்திரவதனா மாதிரி பத்துப்பதினைஞ்சு எண்டும் - வலைபதிகினமோ எண்டு ஆச்சரியமாக்கிடக்கு.

போனமாதம்(போன வரியம்?!) நான் துவங்கின உந்த வலைப்பதிவு என்னை நல்லா மூளைச்சலவை செய்துபோட்டுது.
பள்ளிக்கூடத்துக் கரும்பலகையிலை எழுதிறதும் அழிக்கிறதும் எழுதிறதும் அழிக்கிறதுமாய் (நானெங்கை அழிக்கிறன் அது தானாப் போயிடுது) பாடம் படிக்கிறதுமாதிரி உந்த விளையாட்டிலை எழுத வந்ததுகள் எல்லாம் மறந்து போச்சுது.

எண்டாலும் விடுகிறதில்லை எண்டு ஒரு தீர்மானத்திலை இருக்கிறன்.
மண்டை காய்ஞ்சு போறதுக்குள்ளை எழுத நினச்சதெல்லாம் எழுதிப்போடவேணும்.

"எல்லாரும் ஏறி இளைச்ச குதிரையிலை சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்! எண்டு மூத்தாக்கள் முந்தி பகிடி விடுவினம். அந்தமாதிரித்தான் உங்கடை வலைப்பதிவு!" எண்டு என்ரை மனிசியும் கொடுப்புக்குள்ளை சிரிச்சுக்கொண்டு நிக்குது.

ஒரு ஆம்பிளையின்ரை முன்னேற்றத்துக்குப் பின்னாலை ஒரு பொம்பிளை இருக்கிறாள் எண்டு சொல்லிறது சரியான ஞாயம்தான்.
மனிசன் ஒரு காரியத்தைத் துவங்கினால் மனிசிக்காரி பின்னாலை நிண்டு,
"உது உங்களுக்குச் சரிப்பட்டு வராது!" எண்டு சொல்லவேணும். அப்பதான் அவனுக்குக் கோவம் வந்து செய்துகாட்டிறன்பார் எண்டு ஒரு வேகத்தோட வெளிக்கிடுவான்.
(உதாலைதான் ஒரு ஆம்பிளையின்ரை முன்னேற்றத்துக்குப் பின்னாலை
ஒரு பொம்பிளை இருக்கிறாள் எண்டு சொல்லிறது)

அதெல்லாம் சரி உங்கடை சொந்தப் பேரைப்போட்டு எழுதாமல் எதுக்கு வேறைபேரிலை எழுதிறியள் எண்டு சிலபேர் என்னைக் கேட்டினம்.

என்ரை ஆத்தை என்னைவிட்டுப்போய் இருபது வருசமாகுது.
அவவுக்குப் பிள்ளையாய் , அவவைத்தவிர வேறை உலகம் தெரியாமல், - உந்தக் காதல் கத்திரிக்காய்க்குள்ளை சிக்குப்படாமல்-
இருவது வருசம் இருந்திருக்கிறன்.
அந்தக் காலங்களையும் அப்ப என்னோடை பழகினவங்களையும் நினைவுக்குக் கொண்டுவரவேணுமெண்டால் -
அவவின்ரை பிள்ளையாய் கனவுலகிலையாவது இருக்கவேணும். அதாலைதான் அவவின்ரை பிள்ளை எண்டு பேரைப்போட்டுக்கொண்டு
ஆரம்பிச்சிருக்கிறன்.

என்ன என்ரை கண்ணிலை தண்ணி எண்டு கேட்காதேங்கோ...
ஊர் நினைப்பு வந்திட்டுது...அதுதான்.
(ஊரைப்பற்றி எழுத நினைச்சால் -உந்தப் பிள்ளை சந்திரமதி கந்தசாமி அதைப்பற்றிக் கனக்க எழுதியிருக்கிறா. அவ எழுதினதுக்கும் என்ர ஊருக்கும் என்ன சம்பந்தம் எண்டால்-அதுதானே என்ரை ஊரும்.)


ஊருக்குள்ளை இருக்கிற கண்ணகியம்மன் கோயிலுக்குத் தெற்கால கடல்.
கரையோரமாய் கோயிலுக்கு மேற்கால சுடுகாடு. அதுக்குச் சற்றுத் தொலைவிலை ஆசுப்பத்திரி.
கோயிலுக்கு கிழக்காலை சற்றுத் தூரத்திலை வெளிச்சவீடு.

உந்தக் கோயிலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
உந்தக் கோயிலின்ரை வடக்கு வீதிக்குப் பின்னாலை ஒரு தீர்த்தக்குளம்.
அதுக்குப் பின்னாலை இருக்கிற காணிக்குள்ளை ஒரு கல்வீடு.
அதிலைதான் என்ரை ஆத்தை என்னைப் பெத்தவவாம்.
வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெரிய வேப்பமரம்.
ஒருநாள் வழக்கம்போல விடியப்புறமாய் என்ரை ஆத்தை எழும்பி அந்த வேப்பமரத்தடிக்குப் போனாவாம். அந்த நேரம்பார்த்து அவவின்ரை வயித்துக்குள்ளை இருந்த நான் என்னை வெளிய விடச்சொல்லி அடம்பிடிச்சனாம். உடனை இறக்கி விட்டிட்டாவாம்.
என்ரை ஆத்தை சொல்லிச் சிரிப்பா.

நான் அவவின்ரை வயித்துக்குள்ளை இருக்கிறநேரம் அவவுக்கு அடிக்கடி கனவுகள் வருமாம்.
ஒரு கனவிலை ஒரு தபால்காரன் நிறைய வெள்ளைப் பேப்பருகளை ஒரு கட்டாக்கட்டி தன்னட்டை கொண்டு வந்து தந்திட்டுப்போறதுமாதிரிக் கனவுகண்டாவாம்.
"அதுதானாக்கும் இவனும் எப்ப பார்த்தாலும் பேப்பரும் கையுமா இருக்கிறான்!" எண்டு பெருமையாச் சொல்லிக்கொள்ளுவா.

எத்தனை வயசானாலென்ன...
பெத்த தாயை நினைக்கிறபோது ஒவ்வொருத்தனும் சின்னப்பிள்ளையாய் மாறிப்போறதுதான் இயற்கை.
நாத்திகர்களுக்கும் ஒரு தெய்வம் இருக்குதெண்டால்-
அது அம்மாதான்!

- சின்னாச்சியின்ரமோன்

ஒரு வரியமாச்சுது?!

கனகாலத்துக்கு முந்தி உந்த வலைபதியிற ஆசையிலை
ஏதோ எழுதிப்போட்டு அதை தமிழ்மணத்துக்குள்ளையும் தொடுப்புக் குடுத்திட்டு
அப்பப்ப நேரம் கிடைக்கிற நேரங்களிலை எழுதிக்கொண்டிருந்தன்.
இடைக்கிடை உந்த வலைப்பூ எனக்கு உலைப்பூ வைக்கிறமாதிரி கன கரைச்சலுகளைக் குடுத்துக்கொண்டேயிருந்துது. எண்டாலும் அழிஞ்சுபோனதுகளைத் திருப்பித் திருப்பி எழுதி ஏதோ நானும் எழுதிக்கொண்டிருக்கிறன் எண்டு சந்தோசப் பட்டுக்கொண்டிருந்தன்.
ஆனா அதுக்குள்ளை ஒரு வரியம் ஓடிப் போயிருக்குது எண்டது இப்பதான்
தெரிஞ்சுது.

போன வரியம் சித்திரை மாதத்திலை நான் எழுதின ஒரு விசயத்தை
இப்ப திரும்பவும் எழுதி உங்காலை போட்டிருக்கிறன்.
இது ஒரு அறிமுகம்தான்.

உங்களோடை கதைக்கிறதுக்கு முதல் என்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேணும்தானே..
அதுக்காகத்தான் இது.

எல்லாம் ஒரு நேரம்தான்!

Mittwoch, 4. April 2007

ரெண்டிலை ஒண்டு (1/2)

ரெண்டிலை ஒண்டு 1/2

"இண்டைக்கு நான் ரெண்டிலை ஒண்டு பார்க்காமல் விடப் போறதில்லை!" எண்டு ஆவேசப்படுகிறவர்களைச் சந்திச்சிருக்கிறம்.

அதென்ன ரெண்டு? அதிலை என்ன ஒண்டு? எண்டு அப்ப ஆரும் கேள்வி எழுப்பிறதில்லை.
ஒரு முடிவோடதான் திரும்புவன் எண்டு அவர்கள் சொல்லிப் போறதாகத்தான் தெரியும்.

அரைப்பங்கு எண்டு இலக்கத்திலை குறிக்கவேணுமெண்டால் ஒண்டுக்குக் கீழை ரெண்டைப் போட்டு ரெண்டில் ஒண்டு எண்டு எழுதுவம்.
அப்ப ரெண்டிலை ஒண்டு பார்க்கிறதெண்டால் எடுத்த காரியத்திலை அரைப்பங்குதான் சரிவரும் எண்டு அர்த்தம் வருமோ?
இல்லை.. அப்பிடி இருக்காது.

ஆனா ஒண்டு, எடுத்தகாரியத்திலை ஏதோ ஒரு முடிவு வரவேணுமெண்டால் ரெண்டிலை ஒண்டுதான் சரிவரும்.
என்ன?
வெற்றி இல்லாட்டில் தோல்வி எண்ட ரெண்டிலை ஒண்டு.

வெற்றி கிடைச்சால் அந்தக் காரியம் முழுமையாகிடும்.
தோல்வி கிடைச்சால் அந்தக் காரியம் பாதிதான்.
அதுதான் ரெண்டிலை ஒண்டு.

எப்பவுமே உலகத்திலை நாங்கள் காண்கிறது எல்லாமே ரெண்டு ரெண்டாத்தான் இருக்குது.
அம்மா-அப்பா, இரவு-பகல், இன்பம்-துன்பம், உறவு-பிரிவு, வெப்பம்-குளிர், வெற்றி-தோல்வி இப்பிடி ஒண்டோடை ஒண்டுகலந்திருக்கும். ஆனால் ரெண்டாக இருக்கும்.

"இப்பிடி ஏடாகூடமா ஏதாவது எழுதிக்கொண்டிருந்தியானால் உன்னை நாங்கள் ரெண்டிலை ஒண்டு பார்க்கவேண்டி வரும்!" எண்டு நீங்கள் ஆவேசப்பட்டால் அதுக்கு நான் ஒண்டும் செய்ய முடியாது.
ஏனெண்டால் நீங்கள் சொல்லிற அந்த ரெண்டிலை ஒண்டு என்னெண்டு உங்களுக்கு விளங்காதவரையிலை நீங்கள் என்னை ஒண்டும் செய்ய முடியாது.

அதுசரி-
இந்த ரெண்டிலை ஒண்டு எண்டால் என்ன எண்டு வடிவாய் யோசிச்சால் உலகத்திலை பிறந்த எல்லாருமே ரெண்டிலை ஒண்டுதான் எண்ட உண்மை எல்லாருக்கும் விளங்கும்.

அதாவது அப்பா - அம்மா எண்ட ரெண்டு சீவன்கள் ஒண்டாய்ச் சேர்ந்ததாலைதான் பிள்ளை எண்ட ஒண்டு.

அது ரெண்டிலையிருந்து வந்த ஒண்டு - அதாவது ரெண்டில் ஒண்டு.

சின்னவயசிலை நினைச்சது நடக்குமா எண்டு பார்க்கிறதுக்கு மனசிலை ஒண்டை நினைச்சுக்கொண்டு கைவிரல்களை நீட்டி"ரெண்டிலை ஒண்டைத் தொடு!" எண்டு கேட்டிருக்கிறம்.

நினைச்ச காரியம் ஒண்டுதான்.
ஆனா கேள்வி கேக்கிறபோது ரெண்டு.

ஒரு கேள்விக்கு ஒரு மறுமொழிதான் இருக்கவேணுமெண்டதில்லை.
அதுமாதிரித்தான் இந்த ரெண்டிலை ஒண்டு.

பிற்குறிப்பு:
சின்னாச்சியின்ரமோன் வலைபதியத் தொடங்கின காலம்முதல் கணணியோட மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மண்டை காய்ஞ்சதிலை இண்டைக்கு ரெண்டிலை ஒண்டு பார்க்காமல் இந்த இடத்தைவிட்டு எழும்பிறதில்லை எண்டு எழுதத் தொடங்கினதுதான் இது.
இப்ப ஜெர்மனியிலை வெய்யில் தொடங்கியிருக்குது எண்டதையும் கவனிச்சுக் கொள்ளுங்கோ!
இந்த வரியம் எறிக்கிற வெய்யிலாலை கன வருத்தங்கள் வரப்போகுது எண்டும்
உங்கினை ஒரு கதை அடிபடுகுது.

Sonntag, 1. April 2007

அ-1

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.

-இது நான் சின்ன வயசிலை படிச்சது.

அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.

-இது கொஞ்சம் பெரிய பெடியனாய் வளர்ந்தபோது படிச்சது.

எழுத்துக்களுக்கெல்லாம் முதல் எழுத்து அகரம்.
எண்களுக்கு முதல் எண் 1.

எல்லாத்திலையும் திறமா இருக்கிறதை இங்கிலீஸ்காரன்
A1 எண்டு சொல்கிறது தெரியும்.

இதையே தமிழிலை சொல்றதெண்டால் அ1 எண்டு
சொல்லவேணும்.

ஆனா ஒண்டு எண்டு நான் சொல்லத் துவங்கினால் நீங்கள் சொல்ல வாறதுக்கு நான் ஏதோ மறுப்புச் சொல்ல வாறனாக்கும் எண்டு நீங்கள் நினைக்கப்படாது.

ஆனா ஒண்டு எண்டது நாங்கள் அடிக்கடி பாவிக்கிற சொல்லுத்தான்.

நீங்கள் சொல்கிறது சரிதான் ஆனா ஒண்டு நாங்கள் சொல்லுறதிலையும் ஞாயம் இருக்கெண்டு உங்களுக்கு விளங்கவேணும்.

நீங்கள் கதைச்சதெல்லாம் சரிதான் ஆனா ஒண்டு நீங்கள் அவசரப்பட்டுக் கதைச்சிட்டியள் எண்டெல்லாம் ஆனா ஒண்டு வருகுது.


ஆனா நான் இங்கை சொல்லப்போற ஆனா ஒண்டு
இங்கிலீஸ்காரன்ரை A1 எண்ட அர்த்தத்திலைதான்.


விளங்கிக்கொள்ளுவியள் எண்டு நினைக்கிறன்.

ஆனா ஒண்டு உங்களுக்கு விளங்காட்டிலும் நான் எழுதிறதை நிப்பாட்டமாட்டன் எண்டு மட்டும் இப்போதைக்குச் சொல்லுறன்.


-சின்னாச்சியின்ரமோன்.