Montag, 9. April 2007

எல்லாம் ஒரு நேரம்தான்!

எதையும் சரியாத் தெரிஞ்சுகொள்ளாமல் ஒரு காரியத்திலை இறங்கிறது சரியான பிழை(?)
எல்லாத்தையும் சரியாத் தெரிஞ்சுகொண்டபிறகுதான் காரியத்திலை இறங்கவேணுமெண்டால் அதுக்குள்ளை காலம் கடந்திடும்.

அப்ப என்னதான் செய்கிறது?
காரியங்களைச் செய்துகொண்டே சரி பிழையளையும் கவனிக்கவேண்டியதுதான்.

என்னதான் கொம்பியூட்டரிலை நாலு எழுத்துத் தட்டத்தெரியும் எண்டாலும் இந்தக் கணணிக்குள்ளை வலபதியிறது எண்டது கொஞ்சம் சங்கடமான காரியம்.

என்னெண்டுதான் ஒவ்வொருத்தரும் ஆறேழு எண்டு - உந்தப் பிள்ளை சந்திரவதனா மாதிரி பத்துப்பதினைஞ்சு எண்டும் - வலைபதிகினமோ எண்டு ஆச்சரியமாக்கிடக்கு.

போனமாதம்(போன வரியம்?!) நான் துவங்கின உந்த வலைப்பதிவு என்னை நல்லா மூளைச்சலவை செய்துபோட்டுது.
பள்ளிக்கூடத்துக் கரும்பலகையிலை எழுதிறதும் அழிக்கிறதும் எழுதிறதும் அழிக்கிறதுமாய் (நானெங்கை அழிக்கிறன் அது தானாப் போயிடுது) பாடம் படிக்கிறதுமாதிரி உந்த விளையாட்டிலை எழுத வந்ததுகள் எல்லாம் மறந்து போச்சுது.

எண்டாலும் விடுகிறதில்லை எண்டு ஒரு தீர்மானத்திலை இருக்கிறன்.
மண்டை காய்ஞ்சு போறதுக்குள்ளை எழுத நினச்சதெல்லாம் எழுதிப்போடவேணும்.

"எல்லாரும் ஏறி இளைச்ச குதிரையிலை சக்கடத்தார் ஏறி சறுக்கிவிழுந்தாராம்! எண்டு மூத்தாக்கள் முந்தி பகிடி விடுவினம். அந்தமாதிரித்தான் உங்கடை வலைப்பதிவு!" எண்டு என்ரை மனிசியும் கொடுப்புக்குள்ளை சிரிச்சுக்கொண்டு நிக்குது.

ஒரு ஆம்பிளையின்ரை முன்னேற்றத்துக்குப் பின்னாலை ஒரு பொம்பிளை இருக்கிறாள் எண்டு சொல்லிறது சரியான ஞாயம்தான்.
மனிசன் ஒரு காரியத்தைத் துவங்கினால் மனிசிக்காரி பின்னாலை நிண்டு,
"உது உங்களுக்குச் சரிப்பட்டு வராது!" எண்டு சொல்லவேணும். அப்பதான் அவனுக்குக் கோவம் வந்து செய்துகாட்டிறன்பார் எண்டு ஒரு வேகத்தோட வெளிக்கிடுவான்.
(உதாலைதான் ஒரு ஆம்பிளையின்ரை முன்னேற்றத்துக்குப் பின்னாலை
ஒரு பொம்பிளை இருக்கிறாள் எண்டு சொல்லிறது)

அதெல்லாம் சரி உங்கடை சொந்தப் பேரைப்போட்டு எழுதாமல் எதுக்கு வேறைபேரிலை எழுதிறியள் எண்டு சிலபேர் என்னைக் கேட்டினம்.

என்ரை ஆத்தை என்னைவிட்டுப்போய் இருபது வருசமாகுது.
அவவுக்குப் பிள்ளையாய் , அவவைத்தவிர வேறை உலகம் தெரியாமல், - உந்தக் காதல் கத்திரிக்காய்க்குள்ளை சிக்குப்படாமல்-
இருவது வருசம் இருந்திருக்கிறன்.
அந்தக் காலங்களையும் அப்ப என்னோடை பழகினவங்களையும் நினைவுக்குக் கொண்டுவரவேணுமெண்டால் -
அவவின்ரை பிள்ளையாய் கனவுலகிலையாவது இருக்கவேணும். அதாலைதான் அவவின்ரை பிள்ளை எண்டு பேரைப்போட்டுக்கொண்டு
ஆரம்பிச்சிருக்கிறன்.

என்ன என்ரை கண்ணிலை தண்ணி எண்டு கேட்காதேங்கோ...
ஊர் நினைப்பு வந்திட்டுது...அதுதான்.
(ஊரைப்பற்றி எழுத நினைச்சால் -உந்தப் பிள்ளை சந்திரமதி கந்தசாமி அதைப்பற்றிக் கனக்க எழுதியிருக்கிறா. அவ எழுதினதுக்கும் என்ர ஊருக்கும் என்ன சம்பந்தம் எண்டால்-அதுதானே என்ரை ஊரும்.)


ஊருக்குள்ளை இருக்கிற கண்ணகியம்மன் கோயிலுக்குத் தெற்கால கடல்.
கரையோரமாய் கோயிலுக்கு மேற்கால சுடுகாடு. அதுக்குச் சற்றுத் தொலைவிலை ஆசுப்பத்திரி.
கோயிலுக்கு கிழக்காலை சற்றுத் தூரத்திலை வெளிச்சவீடு.

உந்தக் கோயிலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
உந்தக் கோயிலின்ரை வடக்கு வீதிக்குப் பின்னாலை ஒரு தீர்த்தக்குளம்.
அதுக்குப் பின்னாலை இருக்கிற காணிக்குள்ளை ஒரு கல்வீடு.
அதிலைதான் என்ரை ஆத்தை என்னைப் பெத்தவவாம்.
வீட்டுக்குப் பக்கத்திலை ஒரு பெரிய வேப்பமரம்.
ஒருநாள் வழக்கம்போல விடியப்புறமாய் என்ரை ஆத்தை எழும்பி அந்த வேப்பமரத்தடிக்குப் போனாவாம். அந்த நேரம்பார்த்து அவவின்ரை வயித்துக்குள்ளை இருந்த நான் என்னை வெளிய விடச்சொல்லி அடம்பிடிச்சனாம். உடனை இறக்கி விட்டிட்டாவாம்.
என்ரை ஆத்தை சொல்லிச் சிரிப்பா.

நான் அவவின்ரை வயித்துக்குள்ளை இருக்கிறநேரம் அவவுக்கு அடிக்கடி கனவுகள் வருமாம்.
ஒரு கனவிலை ஒரு தபால்காரன் நிறைய வெள்ளைப் பேப்பருகளை ஒரு கட்டாக்கட்டி தன்னட்டை கொண்டு வந்து தந்திட்டுப்போறதுமாதிரிக் கனவுகண்டாவாம்.
"அதுதானாக்கும் இவனும் எப்ப பார்த்தாலும் பேப்பரும் கையுமா இருக்கிறான்!" எண்டு பெருமையாச் சொல்லிக்கொள்ளுவா.

எத்தனை வயசானாலென்ன...
பெத்த தாயை நினைக்கிறபோது ஒவ்வொருத்தனும் சின்னப்பிள்ளையாய் மாறிப்போறதுதான் இயற்கை.
நாத்திகர்களுக்கும் ஒரு தெய்வம் இருக்குதெண்டால்-
அது அம்மாதான்!

- சின்னாச்சியின்ரமோன்

Keine Kommentare: